1984-ம் ஆண்டு டிசம்பர் 2-3 இடைப்பட்ட இரவில் மத்திய பிரதேச மாநிலத்தின் போபாலில் யூனியன் கார்பைடு ஆலையில் நிகழ்ந்த விஷவாயு கசிவு உலகின் மிக மோசமான விஷவாயு விபத்தாக கருதப்படுகிறது. இந்த நிகழ்வில் 5,479 பேர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் நீண்டகால உடல்நல பிரச்சினைகளை சந்தித்தனர்.
இந்த விபத்துக்கு பிறகு அங்கு சேர்ந்து கிடந்த 377 டன் நச்சுக்கழிவுகளை அகற்றும் பணிகள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தொடங்கியுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இதைச் செய்யாமல் இருந்ததற்கு அதிகாரிகள் மீது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் கடுமையான எச்சரிக்கைகளுக்குப் பிறகு, புதன்கிழமை (ஜனவரி 1) இரவில் இந்த பணி தொடங்கியது.
12 சீல் செய்யப்பட்ட கண்டெய்னர் லாரிகளில், கழிவுகள் பாதுகாப்புடன் பிதாம்புர் தொழில்துறை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.100 பேர் கொண்ட குழு, அரைமணித் தனுக்கொரு முறை ஷிப்ட் முறையில், நச்சுக்கழிவுகளை பேக் செய்து ஏற்றும் பணியில் ஈடுபட்டனர்.இந்த பணிக்குத் தொடர் உடல்நல பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி, 3 முதல் 9 மாத காலத்தில் கழிவுகள் அனைத்தும் எரிக்கப்பட்டு, அதிலுள்ள சாம்பலில் நச்சுத்தன்மை இல்லை என உறுதிசெய்யப்பட்ட பிறகு பாதுகாப்பான முறையில் புதைக்கப்படும்.
இது, போபால் விஷவாயு விபத்துக்கு நீண்டகால தீர்வு காணும் முயற்சியில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.