பாட்னா: பீகாரில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் முன்பு மெகா கூட்டணியில் இடம்பெற்றது. பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியில் இருந்து விலகி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இணைந்தார் நிதிஷ்குமார். இந்நிலையில், லாலு பிரசாத் ஒரு நிகழ்ச்சி ஒன்றில், “கூட்டணிக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
நிதிஷ்குமார் முந்தைய கசப்பான உணர்வுகளை மறந்து மெகா கூட்டணியில் இணைய வேண்டும்” என்று கூறியிருந்தார். முசாபர்பூரில் ரூ.450 கோடி மதிப்பிலான திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க வந்த அவர், கூட்டணிக்கு லாலுவை அழைத்தது குறித்து நிதிஷ்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அவர் கூறியதாவது:-
ஏற்கனவே இரண்டு முறை அவர்களுடன் (லாலு பிரசாத்) கூட்டணி அமைத்து தவறு செய்துவிட்டேன். மீண்டும் அதே தவறை செய்ய மாட்டேன். நமக்கு முன் ஆட்சியில் இருந்தவர்கள் மக்களுக்கு ஏதாவது செய்தார்களா? சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சினார்கள். அந்த ஆட்சியில் இரண்டு முறை தவறுதலாக அவர்களுடன் கைகோர்த்திருந்தேன். இனி அது நடக்காது. அப்போது பெண்களின் நிலை என்ன? இப்போது மத்திய அரசு நமது சுயஉதவிக்குழு திட்டத்தை காப்பி அடிக்கிறது. இவ்வளவு தன்னம்பிக்கையுள்ள கிராமப்புற பெண்களை இதற்கு முன் பார்த்திருக்கிறீர்களா? இவ்வாறு நிதிஷ் குமார் கூறினார்.