பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரத்திற்கான தயாரிப்பில் இறங்கி உள்ளன. வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தொகுதி பங்கீடு பணிகள் நடந்து வரும் நிலையில், இந்த முறை தேர்தல் பிரசாரத்திற்கு ஹெலிகாப்டர்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 12க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், இண்டி கூட்டணி சார்பில் 15 ஹெலிகாப்டர்கள் வரை பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலா 2 ஹெலிகாப்டர்களை முழுநேர தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளன. இதனால் தேர்தல் சூழ்நிலை ஹெலிகாப்டர்களின் வேகத்தில் சூடுபிடித்துள்ளது.

ஒற்றை இன்ஜின் ஹெலிகாப்டர்களுக்கு ஒரு மணி நேர வாடகை ரூ.2 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரட்டை இன்ஜின் ஹெலிகாப்டர்களுக்கு ரூ.4 லட்சம் வரை வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் குறுகிய நேரத்தில் அதிக இடங்களை அடைய முடியும் என்பதால், அனைத்து கட்சிகளும் ஹெலிகாப்டர் பிரசாரத்தில் ஈடுபடுகின்றன.
இந்நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் ராஜேஷ் யாதவ், “எங்கள் தலைவர்கள் எளிமையான முறையில் பிரசாரம் செய்ய விரும்புகின்றனர். லாலு பிரசாத் எப்போதும் சாதாரண ஜீப்பிலேயே பயணிப்பார். ஆனால், தேஜஸ்விக்கு இளைய தலைமுறையினர் ஆதரவு உள்ளது. அதனால் குறுகிய நேரத்தில் மக்களை சந்திக்க ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்துவோம்” என தெரிவித்துள்ளார். பாஜ செய்தித் தொடர்பாளர் வினோத் சர்மா, “பல தொகுதிகளில் வேகமாக பிரசாரம் நடத்த ஹெலிகாப்டர்கள் அவசியம்” என வலியுறுத்தியுள்ளார்.