பீஹாரில், அக்டோபர்–நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான தயார் பணிகளுக்கிடையே, தேர்தல் கமிஷன் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் இறங்கி செயல்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடவடிக்கைகளில், 5.76 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளன என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

243 தொகுதிகள் கொண்ட பீஹார் சட்டசபைக்கு தேர்தல் துவங்க உள்ள நிலையில், கடந்த ஜூன் 23ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையம், மாநிலத்தில் தீவிர திருத்த நடவடிக்கையை அறிவித்தது. அதன் பிறகு, வீடு வீடாக சென்று ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அடையாளத் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர். இந்த நடவடிக்கையால் தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் தவறாக நீக்கப்படும் என்ற சந்தேகத்துடன், எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தையும் நாடினர். ஆனால், நீதிமன்றம் திருத்த பணிக்கு தடை விதிக்க மறுத்தது.
விசாரணையின் போது, 35.69 லட்ச வாக்காளர்கள், பட்டியலில் உள்ள முகவரிகளில் காணப்படவில்லை எனவும், 12.55 லட்சம் பேர் இறந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. அதேசமயம், 17.37 லட்சம் வாக்காளர்கள் பீஹாரை நிரந்தரமாக விட்டு வெளியேறி விட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற பெருமளவு தரவுத் திருத்தங்கள், தேர்தலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் முன்நடைப்பாக பார்க்கப்படுகிறது.
தற்போது, மாநிலம் முழுவதும் உள்ள 7.90 கோடி வாக்காளர்களின் பட்டியலை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிறப்பு திருத்த நடவடிக்கைகள் முடிந்தபின், ஆகஸ்ட் 1ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் தகுதியுள்ள அனைவரும் இடம்பெறுவார்கள் என தேர்தல் கமிஷன் உறுதியளித்துள்ளது.