புதுடில்லி தலைநகரில் உள்ள பல பள்ளிகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துவாரகாவில் உள்ள டில்லி பப்ளிக் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் தீயணைப்பு மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் பள்ளி முழுவதும் தேடுதல் நடத்தினர்.

இதேபோன்று, துவாரகாவில் உள்ள மாடர்ன் கான்வென்ட் மற்றும் ஸ்ரீராம் வேர்ல்டு பள்ளிகளுக்கும் மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன. இதனால் பெற்றோர்கள் பதட்டமடைந்து உடனடியாக பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளை அழைத்துச் சென்றனர். பெற்றோர்கள் கூறுகையில், பள்ளி நிர்வாகத்திலிருந்து குறுஞ்செய்தி வந்ததாகவும், காரணம் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
இதற்கு முன்னர், கடந்த ஜூலை மாதம் பெங்களூருவில் 40க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கும் ஒரே நேரத்தில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு அதிர்ச்சி ஏற்பட்டது. இப்போது டில்லியில் அடுத்தடுத்து மிரட்டல்கள் வந்துள்ளதால் பெற்றோர்களும் மாணவர்களும் அச்சத்தில் உள்ளனர்