புதுடில்லி: டில்லி மற்றும் மும்பை உயர் நீதிமன்றங்களுக்கு மர்ம நபர்கள் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், நீதிமன்ற வளாகங்களில் பரபரப்பு நிலவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் உள்ளிட்ட அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
மிரட்டல் மடலில், டில்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் மூன்று இடங்களில் வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அது முஸ்லிம் பிற்பகல் தொழுகைக்குப் பின் வெடிக்கச் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தகவல் அறிந்தவுடன், விசாரணை நடந்து கொண்டிருந்த நீதிபதிகளுக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகள் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டு, வளாகம் காலி செய்யப்பட்டது.

டில்லியைத் தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்றத்துக்கும் இதேபோன்ற மிரட்டல் வந்ததால், அங்கும் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் முழுமையான சோதனை நடத்தினர். பல மணி நேர தேடுதலுக்குப் பின், எந்த வெடிகுண்டுகளும் இல்லை என உறுதி செய்யப்பட்டதால், இது வெறும் வதந்தி என தெரியவந்தது. பின்னர் மதியம் முதல் நீதிமன்றங்கள் வழக்கம்போல இயங்கின.
மிரட்டல் மடலில், பாகிஸ்தான் உளவுத்துறையின் ஆதரவு, அரசியல் கட்சிகள் குறித்து சாடல்கள், மேலும் தமிழக அரசியலைத் தொட்ட எச்சரிக்கைகள் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக, துணை முதல்வர் உதயநிதியின் மகன் இன்பநிதிக்கு அச்சுறுத்தலும் இடம் பெற்றிருந்தது. இதனால் பாதுகாப்பு அமைப்புகள் அதிகரிக்கப்பட்டு, மிரட்டல் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.