பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் இந்திய விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ‘எக்ஸ்’ தளத்தில் இருந்து மிரட்டல்கள் வருகின்றன. இந்நிலையில் சமூக வலைத்தள நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல்களால் 170க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலில், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை என்றும், முழுமையான விசாரணைக்காகக் காத்திருப்பதாகவும் கூறினார். இதன் பின்னணி குறித்த தகவல்கள் கிடைத்தவுடன் சதி உள்ளதா அல்லது உள்நோக்கம் உள்ளதா என்பதை அறிவிக்க முடியும் என்றார்.
உளவுத்துறையும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் இந்த விவகாரத்தை கண்காணித்து வருகின்றனர். அச்சுறுத்தல்களால் தொழில்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் பறக்க தடை விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் பீதி அடைய வேண்டாம் என்றும், விமான நிலையங்களில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எந்த விதமான பயத்தையும் பரப்ப வேண்டிய நேரம் இதுவல்ல.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.