தலைநகர் டில்லியில் மீண்டும் இரண்டு பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மால்வியா நகர் பகுதியில் உள்ள ஒரு பிரபல பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. உடனடியாக பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தது.

வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் உடனடியாக பள்ளிக்கு வந்து தீவிர சோதனை நடத்தினர். ஆனால் அங்கு எந்தவித வெடிகுண்டும் இல்லை என்பதும் இது வெறும் மிரட்டல் மட்டுமே என்பதும் தெரியவந்தது.
இதேபோன்று கரோல் பாக் பகுதியில் உள்ள மற்றொரு பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் மெயில் வந்தது. அதிலும் போலீசார் சோதனை செய்தபோது இது ஒரு போலி மிரட்டல் மட்டுமே என்று தெரியவந்தது.
மீண்டும் மீண்டும் பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். அண்மையில் ஒரே நாளில் 32 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் இன்னும் நினைவில் இருக்கிறது. இம்முறை வந்த மிரட்டல்கள் எங்கிருந்து அனுப்பப்பட்டன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.