மும்பையில் ரூ.10.96 கோடி மதிப்புள்ள 1,096 கிராம் கோகைன் அடங்கிய 100 காப்ஸ்யூல்களை கடத்த முயன்றதாக பிரேசில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக டிஆர்ஐ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், சாவ் பாலோவிலிருந்து மும்பைக்கு வந்த பெண் பயணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
சோதனையின் போது, இந்தியாவிற்குள் போதைப்பொருட்களை கடத்துவதற்காக 100 கோகைன் காப்ஸ்யூல்களை உட்கொண்டதாக அந்தப் பெண் ஒப்புக்கொண்டார். பின்னர், அவர் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவரது வயிற்றில் இருந்து 1,096 கிராம் கோகைன் அடங்கிய 100 காப்ஸ்யூல்கள் மீட்கப்பட்டன.
இதன் மதிப்பு ரூ.10.96 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். போதைப்பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் பிரேசில் பெண்ணை கைது செய்து, போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.