பெங்களூரு தெற்கு உதவி கலெக்டர் அபூர்வா பிடரி மீது அலட்சியமான செயற்பாடுகளும், லஞ்ச புகார்களும் தொடர்ந்த நிலையில், அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய மண்டல கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக முன்னாள் டிஜிபி சங்கர் பிடரியின் மகளான அபூர்வா, கேஏஎஸ் அதிகாரியாக தற்போது நிர்வாக பொறுப்பில் உள்ளார். ஆனால், சரியான நேரத்தில் அலுவலகம் வராமை, நிலத் தகராறு தொடர்பான கோப்புகளில் நடவடிக்கையின்றி காலதாமதம் ஏற்படுத்துவது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்துள்ளன.

கடந்த மாதம் 19ஆம் தேதி, வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா நேரடியாக அபூர்வாவின் அலுவலகத்தை பார்வையிட சென்ற போது, அவர் நேரில் இல்லாததும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அலுவலகத்துக்கு வெளியே காத்திருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, பலர் “அபூர்வா பணிக்கு லஞ்சம் கேட்கிறார்” என புகார் அளித்துள்ளனர். இதற்காக, மண்டல கமிஷனர் அமலன் ஆதித்யா பிஸ்வாஸ் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் ஜெகதீஷுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன் பின்னர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபூர்வா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை அமைச்சர் கவுடா உறுதிப்படுத்தியதுடன், “சிலர் நேர்மையாக பணியாற்றினாலும், தவறு செய்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். தொடர்ச்சியான அலட்சியத்தால், மக்களிடையே நம்பிக்கை குறைந்து போவதைத் தடுப்பதே முக்கிய நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, அரசு அலுவலகங்களில் நேர்மையும் பொறுப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மற்ற அதிகாரிகளும் உணர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.