புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். முன்னதாக, பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-
பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற லட்சுமி தேவியை பிரார்த்திக்கிறேன். லட்சுமி தேவி ஏழை மற்றும் தாழ்த்தப்பட்டவர்களை ஆசீர்வதிப்பாள். மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க மக்கள் எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். பாஜகவின் மூன்றாவது ஆட்சியின் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட் அனைவருக்குமான திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும். புதுமை, உள்ளடக்கம் மற்றும் மூலதனம் ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளம்.
இதன் மூலம் இந்த பட்ஜெட் மக்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும். சில வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெறும். பெண்கள் மற்றும் இளைஞர் நலன் முன்னேற்றத்திற்காக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். சீர்திருத்தங்கள், நடவடிக்கை மற்றும் மாற்றம் ஆகியவை நமது அடுத்த இலக்குகளாக இருக்கும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். மக்களின் வளர்ச்சிக்காக இந்த அரசு தொடர்ந்து பாடுபடும்.
அனைத்து எம்.பி.க்களும் இந்தியாவின் வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை வழங்குவார்கள் என்று நம்புகிறேன். இந்தியா ஜனநாயகத்தின் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது பெருமைக்குரிய விஷயம். இந்த நேரத்தில், இந்தியா உலக அரங்கில் தன்னை உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது. 2047-ல் இந்தியா 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
2014-க்குப் பிறகு முதல்முறையாக.. தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “2014-க்குப் பிறகு முதல்முறையாக பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு வெளிநாட்டு தலையீட்டால் எந்தக் குழப்பமும் இல்லை. சில ரசிகர்கள் தொடர்ந்து இது போன்ற சலசலப்புகளுக்கு வக்காலத்து வாங்கும் சூழலில் கூட, அப்படி எந்த குறுக்கீடும் ஏற்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.