புதுடெல்லி: மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுநாள் அதாவது 31-ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், அன்றைய தினம் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்குப் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்வார்.
இதையடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி 1-ம் தேதி சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி 9 அமர்வுகளாக 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதி வரை நடக்கிறது.
அதன்பின் மார்ச் 10-ம் தேதி மீண்டும் பார்லிமென்ட் கூடுகிறது. பல்வேறு அமைச்சகங்களின் மானிய கோரிக்கைகள் கூட்டத்தில் விவாதிக்கப்படும். இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 4-ம் தேதி முடிவடைகிறது. மொத்த பட்ஜெட் கூட்டத்தொடரும் மொத்தம் 27 அமர்வுகளைக் கொண்டிருக்கும்.