டெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்குவதற்கான விதிகளில் மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ பள்ளிகள் அங்கீகாரச் சட்டம் 2018-ன் பிரிவு 2.3.5ஐத் திருத்தம் செய்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இனிமேல் சிபிஎஸ்இ பள்ளிகளைத் தொடங்க மாநில அரசின் அனுமதி தேவையில்லை” என்று கூறப்பட்டுள்ளது. பொதுவாக, சிபிஎஸ்இ பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கு மாநில அரசின் தடையில்லாச் சான்றிதழ் அவசியம்.
தற்போதைய திருத்தத்தின்படி, மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் கட்டாயம் இல்லை. சரஸ் இணையதளம் மூலம் அங்கீகாரம் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு தடையில்லா சான்றிதழ் இல்லாமல் சிபிஎஸ்இ பள்ளிக்கான அங்கீகாரம் வழங்கப்படும். புதிய விதியில் செய்யப்பட்ட திருத்தம் 2026-2027 கல்வியாண்டில் அமலுக்கு வர உள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாநில அரசின் என்ஓசி தேவையில்லை என்ற அறிவிப்பு ஏற்கனவே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஒரே நிர்வாகத்தின் கீழ் ஏற்கனவே பல பள்ளிகள் இருந்தால், தனித்தனியாக அங்கீகாரம் பெற வேண்டும் என்பது பழைய விதி. எதிர்காலத்தில் ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் கிடைத்தால் போதும் என்றும், அதே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறத் தேவையில்லை என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.