மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) 35 வகையான அங்கீகரிக்கப்படாத மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இந்த மருந்துகள் சரியான அறிவியல் ஆய்வு இன்றி தயாரிக்கப்பட்ட பல மருந்து சேர்க்கைகளை (FDC – Fixed Dose Combinations) கொண்டுள்ளன.

இந்த பட்டியலில் வலி நிவாரணிகள், நீரிழிவு எதிர்ப்பு மருந்துகள், உயர் இரத்த அழுத்த மருந்துகள், நரம்பியல் வலி நிவாரணிகள், கருக்கொள்ளும் மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் அடங்குகின்றன. இவை ‘காக்டெய்ல் மருந்துகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.
DCGI (Drug Controller General of India) ராஜீவ் சிங் ரகுவன்ஷி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில், CDSCO உடன் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் மதிப்பீடு செய்யப்படாத மருந்துகளுக்கு மாநிலங்களில் அனுமதி வழங்கப்படுவது ஆபத்தானது எனவும், அவற்றை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
CDSCO அனுமதிக்காத இம்மருந்துகள் நோயாளிகளுக்கு ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளதாகவும், இது பொது சுகாதாரத்துக்கு நேரான சவால் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அனைத்து மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இந்த FDC மருந்துகளை மீண்டும் பரிசீலனை செய்து, புதிய ஒப்புதல்களுக்கான நடைமுறையைத் திருத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.