புதிய கிரிமினல் வழக்குகளுக்கு ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்திருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் குற்றவியல் சட்டங்களுக்கு ‘பாரதிய நியாய சன்ஹிதா’ என ஹிந்தி, சமஸ்கிருதம் கலந்திருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதிய குற்றவியல் சட்டங்கள் அரசியலமைப்புக்கு எதிராக இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நிலையில், மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் விளக்கம் அளித்தார்.
இதில் அவர், “புதிய 3 குற்றவியல் சட்டங்களும் ஆங்கிலத்தில் இயற்றப்பட்டது. ‘பாரதிய நியாய சன்ஹிதா’ போன்ற சட்டங்களின் பெயர்கள் கூட ஆங்கில எழுத்துக்களில் உள்ளன, இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் இல்லை. எனவே, இதில் எந்த அரசியலமைப்பு விதிகளும் மீறப்படவில்லை” என்று அவர் விளக்கினார்.
ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் உள்ள பெயரை ஆங்கில எழுத்துக்களில் எழுதினால் அது ஆங்கிலமாகி விடுமோ என்று பலர் குழப்பத்தில் உள்ளனர்.