மத்திய பட்ஜெட் 2025 குறித்து கோவையை சேர்ந்த ஆடிட்டர் ஜி. கார்த்திகேயன் கூறியது: அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் பொறுப்பேற்றதை தொடர்ந்து பொருளாதாரத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்திய பொருளாதார வளர்ச்சி கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
இந்த சூழலில், நடுத்தர மக்கள் வருமான வரி, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளில் சலுகைகள் எதிர்பார்த்தனர். இந்த பட்ஜெட்டில் மிக முக்கியமான அறிவிப்பு, ரூ.12 லட்சம் வருமானத்திற்கு வரி விதிக்கப்படாது என்பது. இது நடுத்தர வர்க்க மக்களுக்கு பெரிய நிவாரணமாக அமைகிறது. இந்த அறிவிப்பால் மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
நுகர்வுக்கு செலவழிப்பர், பொருளாதாரம் ஊக்குவிக்கப்படும். 2023-24ம் ஆண்டு 7.5 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்தனர். இதில் 87% பேர் ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ளவர்கள். அரசின் மூலதன செலவு ரூ.10.18 லட்சம் கோடியில் இருந்து 11.2 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அதிகரிக்கும். மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000 வட்டி வரம்பு ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வாடகை கொடுத்தால், 2.4 லட்சம் வரம்பு 6 லட்சமாக மாற்றப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்திற்கும், ஊரக பெண்கள் தொழில் முனைவோர் ஆக மாறவும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு அதிகரிக்க தேசிய திறன் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடுத்தர மக்களுக்கு உற்சாகம் அளிக்கும் பட்ஜெட் இது. பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.