அமராவதி: ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் ஆந்திரா பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்தது. கடன் சுமை அதிகரித்துள்ளதால் எங்களுக்கு நிதியுதவி செய்யுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லியில் முகாமிட்டு பல்வேறு மத்திய அமைச்சர்களை சந்தித்து, பிரிவினை மசோதாவின் அடிப்படையில் ஆந்திராவுக்கு தேவையான நிதியை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். அவர் நேற்று காலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இருவரும் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆந்திர மாநிலத்தின் நிதி நிலை குறித்தும், ஆந்திராவுக்கு பொருளாதார ரீதியாக ஏன் நிதி ஒதுக்க வேண்டும் என்பது குறித்தும் மத்திய நிதி அமைச்சரிடம் ஆந்திர முதல்வர் அறிக்கை அளித்தார்.
ஆந்திரா தலைநகர் அமராவதி, போலாவரம் உள்ளிட்ட பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்க வேண்டும். கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் ஆந்திராவின் கடன் சுமை அதிகரித்து வருகிறது. எனவே, மாநிலப் பிரிவினை மசோதாவில் கூறப்பட்டுள்ளபடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சரிடம் சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டார். தேவையான உதவிகளை வழங்குவதாக மத்திய நிதியமைச்சர் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா ஆகியோரையும் சந்தித்து பேசினார். ஜப்பான் தூதரையும் சந்தித்தார்.
இதையடுத்து அவர் நேற்று மாலை டெல்லியில் இருந்து ஐதராபாத் திரும்பினார். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்திரபாபு நாயுடு இன்று ஹைதராபாத்தில் சந்திக்கிறார். அப்போது இரு மாநில பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காண்பது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தப்படும்.