இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) பிப்ரவரி 17, 2025 முதல் FASTag விதிகளில் முக்கிய மாற்றங்களை செயல்படுத்தியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடிகளை கடக்கும் போது, FASTag-ல் போதுமான இருப்பு இல்லாத வாகனங்களும், பிளாக்லிஸ்ட் செய்யப்பட்ட டேக்குகளையும் உடைய வாகனங்களும் கடுமையான தண்டனைகளை சந்திக்க நேரிடும்.
இந்த புதிய விதிகள் வழக்கமான பயணிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என NHAI உறுதி செய்துள்ளது. டோல் கட்டணங்கள் விரைவாக வசூலிக்கப்படவும், பயணிகள் தடையின்றி செல்லவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
FASTag-ல் போதுமான இருப்பு இல்லாத வாகனங்களுக்கு, நிலையான டோல் கட்டணத்தின் இரட்டிப்பு தொகை அபராதமாக விதிக்கப்படும். மேலும், டோல் கட்டணம் செலுத்தும் பணம் பெறும் வங்கி மற்றும் வழங்கும் வங்கிக்கிடையே ஏற்படும் தாமதங்களை NPCI (National Payments Corporation of India) தீர்க்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
இந்த விதிகளில் மேலும், ஒரு முக்கியமான மாற்றம் என்னவெனில், வாகனம் சுங்கச்சாவடியில் கடந்த பிறகு 15 நிமிடங்களில் பரிவர்த்தனை முடிவடைய வேண்டும். இல்லையெனில் பயனாளர்கள் கூடுதல் கட்டணங்களை சந்திக்க நேரிடும். அதேசமயம், பயணிகள் தங்களின் FASTag-ஐ டோல் கேட்டிற்கு முன்பாகவே ரீசார்ஜ் செய்ய NHAI வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
2019-ஆம் ஆண்டு “ஒன் நேஷன், ஒன் டேக்” திட்டத்தின் கீழ் FASTag கட்டாயமாக்கப்பட்டதிலிருந்து, இந்தியாவில் டிஜிட்டல் டோல் வசூல் முறைக்கு பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பணமில்லா பொருளாதாரத்திற்காகவும், சாலை பயண அனுபவத்தை மேம்படுத்தவும் அரசு இந்த புதிய மாற்றங்களை செயல்படுத்தியுள்ளது.
இந்த மாற்றங்கள், பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்கவும், வாகன ஓட்டுநர்கள் தங்களின் FASTag இருப்பை முன்கூட்டியே பராமரிக்கவும் உறுதியாக அமைந்துள்ளன.