புதுடெல்லி: வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு தற்காலிக தீர்வு கூட வழங்காமல் இளைஞர்களை பாஜக அரசு ஏமாற்றி வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
1 கோடி இளைஞர்களுக்கு முன்னணி 500 நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் வழங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. பயிற்சி காலத்தில் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்; பயிற்சிக்கான செலவை நிறுவனங்களே ஏற்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
துரோகம்
ராஜ்யசபாவில் இது தொடர்பான விவாதத்தில் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது: பா.ஜ., பட்ஜெட்டில் ‘பி’ என்பது ‘துரோகத்தை’ குறிக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு சாதகமான சூழலை பாஜக உருவாக்கியுள்ளது. முன்னணி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிப்பதாக பாஜக அரசு கூறுகிறது.
இட ஒதுக்கீடு
லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு நிரந்தரத் தீர்வு காண விரும்புகிறார்கள். ஆனால் பாஜக அரசு தற்காலிக தீர்வைக் கூட வழங்காமல் கடுமையாக ஏமாற்றி வருகிறது. SC, ST, OBC, மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்கள் பொதுத்துறையில் இடஒதுக்கீடு மூலம் அனுமதிக்கப்படக் கூடாது என்று பாஜக விரும்புகிறதா? இவ்வாறு கார்கே பேசினார்.