சென்னை சென்ட்ரல் – பகத் கீ கோதி அதிவிரைவு ரயில் சேவையை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி மாநாடு மூலம் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் 1,300 ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த மார்ச் மாதம் சென்னைக்கு வருகை தந்திருந்தார்.
அப்போது, தமிழ்நாட்டில் வசிக்கும் ராஜஸ்தான் மக்கள் அவரைச் சந்தித்து, சென்னை சென்ட்ரல் மற்றும் ராஜஸ்தானில் கூடுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர். இந்தக் கோரிக்கையை பரிசீலித்த ரயில்வே வாரியம், சென்னை சென்ட்ரல் மற்றும் ராஜஸ்தானில் உள்ள பகத் கி கோதி இடையே புதிய அதிவிரைவு ரயில் இயக்கத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், மகாராஷ்டிராவின் புனேவில் நேற்று நடைபெற்ற விழாவில், புனே – ஜோத்பூருக்கான புதிய ரயில் சேவையை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது, சென்னை சென்ட்ரலில் இருந்து ராஜஸ்தானில் உள்ள பகத் கீ கோதி வரையிலான அதிவிரைவு ரயில் சேவையையும் அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தும் இதில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, சென்னை சென்ட்ரலில் இருந்து புதிய ரயில் ராஜஸ்தான் புறப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறைக்கு பிரதமர் மோடி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
நாடு முழுவதும் 1,300 ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகரும் வகையில் தொழில்நுட்பம் மற்றும் பயணிகள் வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார். மும்பையில் இருந்து காணொளி கான்பரன்சிங் மூலம் பங்கேற்ற மத்திய இணையமைச்சர் எல். முருகன், “தமிழ்நாடு மக்கள் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகளை ரயில்வே உடனடியாக நிறைவேற்றி வருகிறது. தற்போது, 2014-ம் ஆண்டை விட 10 மடங்கு அதிக நிதி தமிழக ரயில் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே திட்டங்கள் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ரூ.3,000 கோடி செலவில் 77 ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 9 புதிய ரயில் பாதைத் திட்டங்கள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார். சென்னை சென்ட்ரலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங், கூடுதல் பொது மேலாளர் கௌஷல் கிஷோர், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்ட்ரல் மற்றும் பகத் கீ கோதி இடையேயான வழக்கமான சேவை நாளை முதல் தொடங்கும். திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (வாரத்தில் 5 நாட்கள்) இரவு 7.45 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்படும் சூப்பர்ஃபாஸ்ட் ரயில் (20625), 3வது நாள் மதியம் 12.15 மணிக்கு பகத் கி கோதியை சென்றடையும். திரும்பும் திசையில், சூப்பர்ஃபாஸ்ட் ரயில் (20626) ராஜஸ்தானில் உள்ள பகத் கீ கோதியில் இருந்து திங்கள், புதன், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.