மதுபான ஊழல் தொடர்பாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் அமலாக்க இயக்குனரகம் சோதனை நடத்தி வருகிறது. காங்கிரஸ் பொதுச் செயலாளரும், சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வருமான பூபேஷ் பாகேலின் பங்களா பாதும் நகரின் பிலாய்-3 பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் இன்று காலை திடீரென 4 வாகனங்களில் அவரது வீட்டிற்கு வந்தனர்.
வீட்டில் உள்ளவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு வீடு முழுவதும் தேடி வருகின்றனர். அமலாக்க இயக்குனரக வட்டாரங்கள் கூறுகையில், ‘முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் மீது நிலக்கரி ஊழல் மற்றும் மகாதேவ் பந்தயம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மகாதேவ் கிரிக்கெட் பந்தய செயலியின் உரிமையாளர் சவுரப் சந்திரசேகர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தனது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

திருமணத்திற்கு மும்பை மற்றும் நாக்பூரில் இருந்து விருந்தினர்களை அழைத்துச் செல்ல சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த திருமணத்தில் பல அரசியல் தலைவர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த திருமணத்திற்காக சவுரப் சந்திரசேகர் ரூ.200 கோடி செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கிரிக்கெட் சூதாட்ட செயலி மூலம் கிடைத்த பணத்தை ஹவாலா மூலம் செலவு செய்ததாகவும், சத்தீஸ்கர் அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாகவும் மகாதேவ் குற்றம்சாட்டியுள்ளார்.
சவுரப் சந்திரசேகர் மீது ரூ.5,000 கோடி பணமோசடி புகார் உள்ளது. இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளுக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, எனவே அதற்கான ஆதாரங்களை சேகரிக்க தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது. மதுபானக் கொள்கை வழக்கில் மோசடி செய்ததாக பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல் மீதும் அமலாக்க இயக்குனரகம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த சட்டவிரோத பணப் பரிமாற்றத்தால் அரசுக்கு சுமார் 2,100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அமலாக்க இயக்குனரகம் தெரிவித்திருந்தது. பூபேஷ் பாகேல் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் தொடர்புடைய 14 இடங்களில் அமலாக்க இயக்குனரகம் சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்றைய ரெய்டு குறித்து பூபேஷ் பாகேல் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘கடந்த 7 ஆண்டுகளாக தொடரப்பட்ட பொய் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு பிறகு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், இன்று காலை முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பூபேஷ் பாகேலின் பிலாய் வீட்டில் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.