ஆந்திராவின் இரு கோதாவரி மாவட்டங்களிலும் சுமார் 5 லட்சம் கோழிகள் இறந்ததற்கு பறவைக் காய்ச்சல்தான் காரணம் என மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. இதனால், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் பண்ணை கோழிகள் விற்பனைக்கு தடை விதித்து, ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆந்திராவில் கோழிக்கறி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. ஆந்திராவின் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் 4 லட்சம் பண்ணை கோழிகள் திடீரென இறந்தன. அதன் பிறகு மேலும் ஒரு லட்சம் பண்ணை கோழிகளும் இறந்தன.
இதனால் பண்ணை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கால்நடைத்துறை அதிகாரிகள் இரு மாவட்டங்களிலும் ஆய்வு நடத்தி, இறந்த கோழிகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து, போபால், விஜயவாடாவில் உள்ள பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைத்தனர். நேற்று அறிக்கை வந்தது. பாதிக்கப்பட்ட அனைத்து பண்ணைக் கோழிகளும் பறவைக் காய்ச்சலால் (H-5-N-1) இறந்ததாகக் கூறப்பட்டது.
மேலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் வெளிநாட்டுப் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக நம் நாட்டிற்கு வந்தபோது அவற்றின் மலம் தண்ணீரில் கலந்தது. இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள பண்ணை கோழிகளுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டதால் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாக அறிக்கை கூறுகிறது. இதன் காரணமாக இவ்விரு மாவட்டங்களில் மட்டும் பண்ணை கோழிகள் விற்பனைக்கு தடை விதித்து ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் மற்ற மாவட்டங்களுக்கு பரவாததால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோழி முட்டைகள் சுமார் 100 டிகிரி வெப்பநிலையில் சமைப்பதால், எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றும் கால்நடை துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த பறவைக் காய்ச்சல் பீதியால் ஆந்திராவின் பிற மாவட்டங்களில் பண்ணைக் கோழியின் விலை ரூ.95 ஆக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.