மைசூர்: சட்டசபை கூட்டத்தொடர் வரும் 15ம் தேதி துவங்குகிறது. ‘முடா’ பற்றி கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்கிறேன். எனது மனைவி விவகாரத்தில் பாஜக அரசியல் செய்கிறது என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மைசூரில் அவர் அளித்த பேட்டி: ‘மூடா’ எனும் மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் குறித்து விசாரணை நடக்கிறது. எனது மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக பாஜக சர்ச்சையை கிளப்புகிறது. எல்லாம் சட்டப்படி நடந்தது. 15ம் தேதி முதல் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கிறது. ‘முடா’ பற்றி கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்கிறேன்.
நிலமற்றவர்களின் நிலை வேறு. இது எங்கள் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்திய வழக்கு. எங்கள் நிலத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என என் மனைவி கேட்கிறார். விஜயநகரில் எங்களுக்கு மனை வழங்குமாறு கேட்கவில்லை. சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்தியது தவறு என்பதை ஆணையமே ஒப்புக்கொண்டது. எனவே, சட்டவிரோதமானது என்ன? உன் நிலத்தில் இப்படி செய்தால் சும்மா விடுவாயா?
மூடா நில விவகாரம் தொடர்பாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. நிலம் ஒதுக்குவதை நிறுத்திவிட்டோம். விதிமீறல் புகார் வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் கூறியது இதுதான்.