திருப்பதி: திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
திருப்பதியில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த ஆறு பேரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என ஆந்திர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு டோக்கன் வாங்குவதற்காக வரிசையில் நின்ற பக்தர்கள் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் அவதிப்பட்டதாகவும், இதில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய ஆறு பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது.
இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் இடத்திற்கு சென்ற வருவாய் துறை அமைச்சர் அங்கனி சத்ய பிரசாத், மீட்பு பணிகளை முடுக்கி விட்டு உள்ளார். இந்நிலையில் இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள வருவாய் துறை அமைச்சர் அங்கனி சத்ய பிரசாத், இந்த சம்பவத்திற்கு ஒருங்கிணைப்பு இல்லாததுதான் காரணம் என்பது விசாரணையில் தெரிய வரும் என்றும் கூறினார்.
இறந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், இறுதி சடங்கில் பங்கேற்க அந்தந்த கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.