புது டெல்லி: பீகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை முன்கூட்டியே அறிந்திருப்பதாகவும், அதனால்தான் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக அந்தக் கட்சி புகார் அளிப்பதாகவும் பாஜக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மூத்த தலைவர் அனுராக் தாக்கூர், “ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து வருகிறது.
ஒருவரின் தலைமையில் ஒரு கட்சி 90 முறை தோல்வியடைந்திருந்தால், அது ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் சந்தித்த தோல்விகள்தான். இந்தத் தோல்வி ஒரு வரலாறாக மாறியதிலிருந்து, ராகுல் காந்தியின் தலைமை குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. காங்கிரஸ் தோல்வியடையும் போதெல்லாம், ராகுல் காந்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விமர்சித்து வருகிறார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ததாக காங்கிரஸ் பலமுறை குற்றம் சாட்டி வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தடை செய்து வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிய நிகழ்வுகளும் உள்ளன. ஒவ்வொரு தேர்தல் தோல்விக்குப் பிறகும், காங்கிரஸ் புதிய காரணங்களைத் தேடுகிறது.
அவர்கள் சுயபரிசோதனை செய்வதில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் ஆணையம் மற்றும் அரசியலமைப்பு அமைப்புகளைக் குறை கூறுகிறார்கள். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடையும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். அதனால்தான் “அவர்கள் மற்ற எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.
1952-ம் ஆண்டில், காங்கிரஸ் கட்சியும் சிபிஐயும் இணைந்து பி.ஆர். அம்பேத்கரின் தோல்வியை உறுதி செய்தன. 1952-ம் ஆண்டிலேயே தேர்தல் ஊழலுக்கு அடித்தளமிட்ட கட்சி காங்கிரஸ் தான்,” என்று அவர் கூறினார்.