ஸ்ரீநகர்: காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா இன்று (அக்டோபர் 16) பதவியேற்கிறார். இந்நிலையில், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கேற்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவையில் இடம் கிடைத்த பிறகும் காங்கிரஸ் புறக்கணித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஒமர் அப்துல்லாவுடன் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. உமர் அப்துல்லா பதவியேற்பு விழாவில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. பங்கேற்க உள்ளார்.
காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 55 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 4 சுயேச்சை எம்எல்ஏக்களும், ஆம் ஆத்மி கட்சியின் ஒரு எம்எல்ஏவும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ், ஆட்சியில் பங்கேற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஹரியானா தேர்தல் தோல்விக்குப் பிறகு, காங்கிரஸ் இப்போது ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா தேர்தல்களில் அதிக கவனம் செலுத்துகிறது.
முன்னதாக, மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவம்பர் 20-ம் தேதி ஒரு கட்டமாகவும், ஜார்க்கண்டில் நவம்பர் 13 மற்றும் 20-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.