பெங்களூரு: பாலியல் வன்கொடுமை குறித்த தனது கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும், தனது பேச்சு பெண்களுக்கு வலியை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் கடந்த 3-ம் தேதி காலை பாரதி லே அவுட் பகுதியில் இரண்டு பெண்கள் தெருவில் நடந்து சென்றபோது பின்தொடர்ந்து சென்றவர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதன் சிசிடிவி காட்சிகள் வைரலானதை அடுத்து, பெங்களூருவில் தெருக்களில் நடப்பது கூட பாதுகாப்பற்றதாகிவிட்டதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கும். சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அந்த நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் பரமேஸ்வராவின் பதில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாலியல் வன்கொடுமைகளை நியாயப்படுத்துவது போல் அமைச்சரே பேசலாமா என்று பலர் கேள்வி எழுப்பினர். இதனிடையே அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக கவர்னர் மற்றும் முதல்வருக்கு தேசிமா மகளிர் ஆணையம் கடிதம் எழுதியது.

இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள பதிவில், “சமீபத்தில் பெங்களூரு பாலியல் வன்கொடுமை வழக்கில் கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா கூறிய பொறுப்பற்ற கருத்துக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜய ரஹத்கர் உத்தரவுப்படி ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்து பெண்களுக்கு எதிரான குற்றங்களை இயல்பாக்குகிறது. மன்னிப்பு கேட்டு, சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இதைத்தொடர்ந்து, பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பரமேஸ்வரா, நேற்று நீங்கள் (ஊடகங்கள்) என் கருத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை, மற்ற தளங்களும் வித்தியாசமாக புரிந்து கொண்டீர்கள், பெண்களின் பாதுகாப்பை நான் எப்போதும் ஆதரித்தேன், உள்துறை அமைச்சராக இருந்த நான், நிர்பயா திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். எனது கருத்தை சிலர் திரித்து என்னை பற்றி பேசுவது சரியல்ல. சகோதரிகள் மற்றும் தாய்மார்களின் பாதுகாப்பிற்காக நான் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், துறை அதிகாரிகளை பொறுப்பாக்கியுள்ளேன். எனவே எனது அறிக்கையை திரித்து கூறுவது சரியல்ல. அரசியல் செய்யும் பாஜகவினருக்காக இதை நான் சொல்லவில்லை. எனது கருத்து, எங்கள் சகோதரிகள் மற்றும் தாய்மார்களுக்கு யாரேனும் வலியை ஏற்படுத்தியிருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அதை வேறு விதமாக வெளிப்படுத்தி வெவ்வேறு தளங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.