புதுடில்லி : மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில், ‘கோல்ட்ரிப்’ மற்றும் ‘நெக்ஸ்ட்ரோ’ இருமல் மருந்துகள் காரணம் என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து இரண்டு மாநிலங்களிலும் 15 மருந்துகள் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டன.

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், வைராலஜி நிறுவனம், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்டவை சேகரித்த மாதிரிகளை பரிசோதித்ததில், சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும் ‘டை எத்திலீன் கிளைகால்’ போன்ற நச்சுக்கள் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. அதேசமயம், 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து பரிந்துரைக்கப்படக் கூடாது என்றும், இயற்கையாகவே குணமடையும் சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு ஓய்வு மற்றும் நீர்ச்சத்து பராமரிப்பு போதுமானது என்றும் அறிவுறுத்தியது.
ஆனால், தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் இயங்கும் ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தயாரித்த ‘கோல்ட்ரிப்’ மருந்தில் ‘டை எத்திலீன் கிளைகால்’ ரசாயனம் கண்டறியப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை உறுதி செய்தது. அதனால் தமிழக அரசு, அந்த மருந்தின் விற்பனை மற்றும் விநியோகத்தை முழுமையாக தடைசெய்துள்ளது. மேலும், நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி, உற்பத்தி உரிமம் ரத்து செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
இதன் மூலம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் அறிக்கைகள் நேர்மாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றன. ஒருபுறம் மத்திய அரசு நச்சுத்தன்மை இல்லை என்று கூற, மறுபுறம் தமிழக அரசு சோதனையில் நச்சு ரசாயனம் இருப்பதை உறுதி செய்திருப்பது பொதுமக்களில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.