விசாகப்பட்டினம் கைலாசகிரி மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது. இந்த பாலம் விசாகப்பட்டினம் பெருநகரப் பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் மேற்பார்வையில், 862 அடி உயரத்தில் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

மொத்தம் 55 மீட்டர் நீளமுடைய இந்த பாலம், கேரளாவின் வாகமோன் கண்ணாடி பாலத்தை விட நீளமானது. 40 மில்லிமீட்டர் தடிமனுடைய ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட டெம்பர்டு லேமினேட் கண்ணாடி பேனல்கள் மூன்று அடுக்குகளாக பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பாலத்தின் வலிமை, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த பாலம் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட மக்களைத் தாங்கும் திறன் கொண்டது. ஒரு சதுர மீட்டருக்கு 500 கிலோ எடையுள்ள சுமைகளையும் தாங்கும் வல்லமை பெற்றுள்ளது. எனினும் பார்வையாளர்களின் பாதுகாப்பு கருதி, 40 பேர் கொண்ட குழுக்களாக மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் புயல்களையும், கடலோர நகரம் சந்திக்கும் சூறாவளிகளையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி பாலம், விரைவில் விசாகப்பட்டினத்தின் புதிய அடையாளமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா வளர்ச்சிக்கும், மாநிலத்தின் அடையாளத்துக்கும் இது ஒரு பெரும் முன்னேற்றமாகும்.