புதுடில்லியில் செயல்பட்டு வரும் டில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள லட்சுமிபாய் கல்லூரியில் அருவருப்பும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்திய ஒரு சம்பவம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அந்த கல்லூரியின் முதல்வர் பிரத்யூஷ் வத்சலா, வகுப்பறை சுவர்களில் தனது கைகளால் நேரடியாக மாட்டு சாணத்தை பூசியது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. மாணவர்களின் கல்விக்கூடத்தில் மாட்டு சாணம் பயன்படுத்துவது தகுந்ததா? என்ற கேள்விகள் எழும் நிலையில், முதல்வர் அளித்த விளக்கம் கவனத்தை ஈர்த்துள்ளது.
பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரத்யூஷ் வத்சலா, இது ஒரு ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக மட்டுமே நடந்தது என தெரிவித்தார். வகுப்பறைகளில் உள்ள சுவர்களில் மாட்டு சாணம் பூசுவது, இந்திய பாரம்பரியத்தில் பயன்படுத்தப்பட்ட இயற்கை முறைகளின் அடிப்படையில் வெப்ப அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சோதனையாகும் என்று அவர் கூறினார். மேலும், இது ஒரு விஞ்ஞான அடிப்படை கொண்ட ஆய்வாகவே நடந்தது என்றும், ஒரு வாரத்திற்குள் இந்த ஆய்வு முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளார்.
தானாகவே ஒரு சுவற்றின் ஒரு பகுதியில் சாணத்தை பூசினதைத் தவிர, பிறரால் செய்யப்படவில்லை என்றும், இயற்கை சாணத்தை கையில் தொடுவது எந்தவித தீங்கையும் தராது எனவும் அவர் விளக்கினார். தன்னைக் குறை கூறுவோர் உண்மையை அறியாமல் தவறான தகவல்களை பரப்புவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பரவிய பிறகு, பல தரப்பினரும் கல்வி நிலையங்களில் மேற்கொள்ளும் சோதனைகள் மற்றும் பரிசோதனைகளுக்கு வரம்புகள் இருக்க வேண்டுமா என்ற விவாதத்தை தொடங்கியுள்ளனர். மேலும், மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவையும் இந்நிலையில் முக்கிய அம்சங்களாக எழுந்துள்ளன.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வெகுவாக பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து எந்த விளக்கமும் அளிக்காமல் இருப்பது கேள்விக்குறியாகவும் உள்ளது. ஒரு உயர்கல்வி நிறுவனத்தில் இத்தகைய செயல் நடத்தப்படுவதை பலரும் வருத்தத்துடன் பார்ப்பதாகக் கருத்து தெரிவிக்கின்றனர்.