புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைவர்களில் 40% பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று ஜனநாயக சீர்திருத்த அமைப்பான ஏ.டி.ஆர். வெளியிட்டுள்ள ஆய்வு தெரிவிக்கிறது. இந்த செய்தி, அரசியல் நிலைத்தன்மைக்கும் பொது நலத்திற்குமான நம்பிக்கைக்கும் ஒரு பெரும் சவாலாக அமைந்துள்ளது. அதேசமயம், குற்றவாளிகள் பதவியில் நீடிக்க முடியாத வகையில் புதிய சட்ட மசோதாவும் பார்லியமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, ஆகஸ்ட் 22 ஆம் தேதி பீகார் நிகழ்ச்சியில் பேசும்போது, “சிறையில் இருந்து ஆட்சி நடத்தும் நாட்கள் இனி இல்லை” என்று கூறினார். இதனைத் தொடர்ந்தே, உள்துறை அமைச்சர் அமித் ஷா புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளார். அதன் படி, பிரதமராக இருந்தாலும் குற்றவழக்கில் 30 நாட்கள் சிறை சென்றால் பதவி தானாகவே பறிக்கப்படும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும்.
ஏ.டி.ஆர். ஆய்வு குறிப்பிடுகையில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மீது 89 வழக்குகள் உள்ளன. அதில் 72 வழக்குகள் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழான தண்டனைக்குரிய வழக்குகள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது 47 வழக்குகள், அதில் 11 கடுமையான குற்ற வழக்குகள். இதேபோல ஆந்திர முதல்வர் 19, கர்நாடகா முதல்வர் 13, ஜார்க்கண்ட் 5, மஹாராஷ்டிரா மற்றும் ஹிமாச்சலில் தலா 4, கேரளா 2 மற்றும் பஞ்சாப் முதல்வர் மீது 1 வழக்கு உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் கொலை, கொலை முயற்சி, ஊழல், ஆட்கடத்தல் போன்ற கடுமையான குற்றங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் பொறுப்புகளில் உள்ளோர் மீது இப்படியான குற்றச்சாட்டுகள் இருப்பது, ஜனநாயகத்திற்கு எதிரானவையாகவும், சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியானது என்ற நம்பிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.