பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழலில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்தச் சூழலில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படும் சிஆர்பிஎஃப் வீரர் முனீர் அஹமத், திடீரென பணியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்முவில் வசித்து வரும் முனீர், மீனல் கான் என்ற பாகிஸ்தான் பெண்ணை 2024 மே 24ஆம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக திருமணம் செய்ததாக கூறுகிறார். இந்த திருமணத்திற்கு முன்பே 2022 டிசம்பரில் துறையில் அனுமதி கேட்ட கடிதத்தை எழுதியதாகவும், அதனைத் தொடர்ந்து தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதி பெற்றதாகவும் விளக்கியுள்ளார். திருமணத்திற்குப் பிறகு, திருமண சான்றிதழ் மற்றும் புகைப்படங்களுடன் மேலும் தகவல்களையும் தலைமையகத்துக்கு அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.
பிப்ரவரி 2025ல் அவரது மனைவிக்கு விசா கிடைத்ததை அடுத்து, அவர் இந்தியா வந்ததும் கூட துறைக்கு தகவல் அளித்ததாக முனீர் கூறுகிறார். தொடர்ந்து நீண்டகால விசாவுக்கான விண்ணப்பமும், ஜம்முவில் FRRO அதிகாரிகளுடன் நேர்காணலும் நடந்ததாகவும், எல்லா தகவல்களும் முறையாக பகிரப்பட்டிருந்தன என்றும் அவர் தெரிவிக்கிறார்.
மார்ச் மாதம் 41வது பட்டாலியனில் அனைத்து விவரங்களையும் விளக்கமளித்த பிறகும், பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு திடீரென தனது பணிநீக்கம் குறித்த தகவலை பெற்றதாக அவர் கூறுகிறார். “என் மனைவியை இங்கே வைத்திருந்ததற்கும், துறைக்கு தகவல் தரவில்லை என்பதற்கும் என்னை பணி நீக்கம் செய்ததாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், என் பக்கம் அனைத்துத் தகவல்களும் நேர்மையாக பகிரப்பட்டுள்ளது. எனக்கு ஆதார ஆவணங்களும் உள்ளன,” என்கிறார் முனீர்.
தன்னை மீண்டும் பணியில் இணைக்க வேண்டும் என்றும், இந்தத் தீர்மானத்திற்கு எதிராக பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரிடம் முறையீடு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம், பாதுகாப்பு துறையில் பணியாற்றும் வீரர்கள் மற்றும் சீர்திருத்தம் தேவைப்படும் நடைமுறைகள் குறித்த புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது.