புதுடெல்லி: சமூக வலைதளங்கள் மற்றும் மேட்ரிமோனியல் இணையதளங்கள் மூலம் 50-க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய நபரை 5 ஆண்டுகால தேடுதலுக்கு பிறகு டெல்லி போலீசார் பிடித்துள்ளனர்.
ஆண்டு 2020, கொரோனாவின் நேரம். மக்கள் உயிருக்கு பயந்து வீட்டிலேயே முடங்கிக் கிடந்த காலம். மற்றவர்களைப் போலவே டெல்லியைச் சேர்ந்த முகிம் அயூப் கான் (38) என்பவர் முடங்கிப்போனார்.
அதில், மனைவி மற்றும் 3 குழந்தைகளின் முகத்தை பார்த்து களைப்படைந்தார். ‘ஏய்… என்ன வாழ்க்கை… த்ரில்லிங்காக ஏதாவது செய்ய வேண்டும்…’ என்ற எண்ணம் வந்தது.
கரோனா கட்டுப்பாடுகள் தளர்ந்ததும் மனைவி, குழந்தைகள் அம்போ என வீட்டை விட்டு வெளியேறினர். இந்தியாவில் இயங்கி வரும் 2 பிரபல மேட்ரிமோனியல் இணையதளங்களில் 20-க்கும் மேற்பட்ட வெவ்வேறு பெயர்களில் பதிவிட்டு பெண்களை தேடி வந்தார்.
இதற்காக மத்திய அரசின் உயர் பதவிகள் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளில் இருப்பது போல் போலி அடையாள அட்டைகளை உருவாக்கினார்.
சமூக வலைதளங்கள் மூலமாகவும் பெண்களிடம் தூண்டில் போட்டுள்ளார். இதன் மூலம் பல பெண்கள் இவரிடம் விழுந்தனர். ஆனால் அவர் மிகவும் பணக்கார பெண்களை மட்டுமே குறிவைத்தார். குறிப்பாக, அவர் விதவைகள் அல்லது விவாகரத்து செய்யப்பட்ட பெண்களைத் தேர்ந்தெடுத்தார்.
இதன் மூலம் 6க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடி செய்துள்ளார். பெற்றோரைச் சந்தித்து இனிமையாகப் பேசி அவர்களுக்குத் திருமண வாழ்த்து சொல்லி வலையில் சிக்க வைப்பார்.
திருமணம் செய்யும் பெண்ணுடன் கடைக்கு செல்வார். அங்கே விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், நகைகள் போன்றவற்றை வாங்குவார்.எல்லாவற்றையும் முடித்துவிட்டு பர்ஸைத் தேடுவார். கையை பிசைந்து கொண்டு, ‘ஐயோ… பணப்பை எங்கே போனது என்று தெரியவில்லை… டெபிட், கிரெடிட் கார்டுகள் கூட வாலட்டில் இருக்கு… இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை… அருகில் இருக்கும் மணமகள் ‘நான் தருகிறேன்’ என்று பணத்தைக் கொடுப்பாள் அல்லது பெற்றோரை அழைத்து பணத்தை எடுக்கச் சொல்வாள்.
அந்த பொருட்கள் கிடைத்தவுடன், அயூப்கான் அந்த ஊரிலிருந்து கம்பியை நீட்டிப்பார். இதேபோல் இவரிடம் ஏமாந்த பெண்கள் பலர் 2020ம் ஆண்டு முதல் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் உள்பட பல்வேறு மாநிலங்கள் அவரை வேட்டையாட தொடங்கினர். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவானார்.
இறுதியாக, கடந்த வியாழன் அன்று, அவர் குஜராத்தின் வதோதராவில் இருந்து டெல்லிக்கு ரயிலில் வந்ததை டெல்லி போலீசார் கண்டனர். அவருக்குத் தெரியாமல் சாதாரண உடையில் போலீஸாரும் அந்த ரயிலில் அவருடன் பயணம் செய்தனர்.
ரயில் டெல்லி நிஜாமுதீன் நிலையத்தை அடைந்தபோது, அயூப்கான் சுற்றி வளைக்கப்பட்டார். அவர்களைப் பார்த்ததும், தான் ‘சிக்கப்பட்டது’ என்பதை உணர்ந்து, வார்த்தையின்றி சரணடைந்தார். தற்போது அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த காலகட்டத்தில் 3 பெண்களை திருமணம் செய்து கொண்டு பணம், நகைகளை பறித்து கொண்டு தலைமறைவானது தெரிய வந்துள்ளது.