திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதனால் சந்திரகிரி அருகே ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் வரும் பக்தர்களுக்கு தினமும் 3000 திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு விரைவில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிகாலையில் வந்து வரிசையில் நின்று டோக்கன் பெற்று மலைப்பாதையில் நடந்து செல்வது வழக்கம்.
ஆனால், இங்கு வரிசையில் நிற்கும் பக்தர்களை விட, ஆட்டோ டிரைவர்கள் மூலம் வரும் பக்தர்களுக்கு பணத்துக்கு ஈடாக டோக்கன் வழங்கப்படுகிறது. இதற்கு கோவில் ஊழியர்களும் உடந்தையாக இருப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆட்சி மாறினாலும் தரகர்களின் ஆதிக்கம் இங்கு தொடர்கிறது.
சில ஆட்டோ டிரைவர்கள் தாங்கள் கொண்டு வரும் பக்தர்களுக்கு தாமதமாக வந்தாலும் டோக்கன் கொடுக்கின்றனர். மணிக்கணக்கில் வரிசையில் நிற்பவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. பக்தர்களை கட்டுப்படுத்துவதிலும், வரிசை அமைப்பதிலும் பல முறைகேடுகளை போலீசார் கண்டுகொள்வதில்லை.
வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் ஏராளமான பக்தர்களிடம் பணம் சம்பாதிக்கும் நோக்கில் சிலர் திருமலைக்கு வருவதால், சாதாரண பக்தர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இதுகுறித்து அறங்காவலர் குழு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.