இந்தியாவில் பட்டதாரிகள் வேலைவாய்ப்பு பெறும் நிலைமையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மெர்சர்-மெட்ல் நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 2024ஆம் ஆண்டு மட்டும் 42.6% பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததாக அறிக்கை கூறுகிறது, இது 2023ஆம் ஆண்டில் இருந்த 44.3% வீதத்திலிருந்து குறைவாகும்.
மெர்சர்-மெட்ல் நிறுவனத்தின் ‘இந்திய பட்டதாரிகள் திறன் குறியீடு 2025’ அறிக்கை, 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 2,700க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரே ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களை ஆய்வு செய்ததின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.
அறிக்கையில், தொழில்முறை திறன்களைக் கொண்ட பட்டதாரிகள் சிறப்பாக செயல்பட்டாலும், சுயதிறன்கள் மற்றும் கலைத்திறன்களில் குறைவு காணப்படுவதாகவும் இதனால் வேலைவாய்ப்பு வாய்ப்பு குறைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநிலம் 53.4% வேலைவாய்ப்பு வீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து, ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகியவை 51.1% வேலைவாய்ப்பு வீதத்துடன் தொடருகின்றன.
தொழில்நுட்ப துறைகளில் (AI, ML, Data Science) பட்டதாரிகள் வேலைவாய்ப்பு பெற்ற வீதம் 2023ஆம் ஆண்டில் 41.3% இருந்தது, 2024இல் இது 42% ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், தொழில்நுட்பமல்லாத துறைகளில் (HR, Digital Marketing, Business Analytics) வேலைவாய்ப்பு வீதம் 48.3% இலிருந்து 43.5% ஆக சரிந்துள்ளது. குறிப்பாக, மனிதவள (HR) துறையில் வேலைவாய்ப்பு வாய்ப்பு 39.9% ஆக மிகக்குறைவாக உள்ளது.
ஆண்கள் வேலைவாய்ப்பு பெறும் வீதம் 43.4% ஆக இருக்க, பெண்கள் 41.7% வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தொழில்நுட்ப துறையில், ஆண்கள் 43.9% வேலைவாய்ப்பு பெற்றுள்ள நிலையில், பெண்கள் 41.9% மட்டுமே பெற்றுள்ளனர்.
வேலைவாய்ப்பு வீதத்தில் முன்னணி மாநிலங்கள் டெல்லி 53.4%, ஹிமாச்சல் பிரதேசம் 51.1%, பஞ்சாப் 51.1%, உத்தர்காண்ட் 50% மற்றும் ஜார்க்கண்ட் 49.6% ஆகும்.
Tier 1 கல்லூரிகளில் பட்டதாரிகள் 48.4% வேலைவாய்ப்பு பெறுகின்றனர். Tier 2 கல்லூரிகளில் இது 46.1% ஆக உள்ளது. Tier 3 கல்லூரிகளில் வேலைவாய்ப்பு வீதம் 43.4% ஆக குறைந்துள்ளது.
இந்த அறிக்கை, தொழில்முறை திறன்கள் மட்டுமின்றி, நுண்ணறிவு, ஆற்றல் வளர்ச்சி, மற்றும் நிகழ்கால தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் திறன் ஆகியவை பட்டதாரிகளின் வேலைவாய்ப்பை தீர்மானிக்கின்றன என்பதை வலியுறுத்துகிறது.