டில்லியில் காற்று மாசுபாடு அதிகரித்திருப்பதை அடுத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக 10 ஆண்டுகள் பழமையான டீசல் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், மக்கள் அதனை எதிர்த்து போராடத் தயாராக உள்ளனர். காற்று தர குறியீடு மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், பழைய வாகனங்களை கட்டுப்படுத்துவதில் அரசு தீவிரம் காட்டுகிறது.

மாசுபாடு கட்டுப்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட காற்று மேலாண்மை கமிஷனின் உத்தரவின் பேரில், டில்லியில் உள்ள 62 லட்சம் வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வாகனங்களின் தயாரிப்பு ஆண்டு அடிப்படையில் சோதனை நடத்த, பெட்ரோல் பங்குகளில் சிறப்பு குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன. ரி.சி. கார்டு காட்டாவிட்டால் எரிபொருள் நிரப்ப மறுப்பு, மேலும் பறிமுதல் நடவடிக்கைகள் தொடர்வதால், மக்கள் மீதான அழுத்தம் அதிகமாகியுள்ளது.
தடை உத்தரவு அமலிலிருக்கும் இரண்டு நாட்களில் மட்டும் 245 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் போன்ற பகுதிகளில் இருந்து டில்லிக்கு வருகின்ற காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பறிமுதல் படக் கூடும் என்ற அச்சத்தால், வாகனங்கள் எல்லையிலேயே சரக்குகளை இறக்கிவிட்டு செல்கின்றன.
இந்த நடவடிக்கை காரணமாக, விலை உயர்வு, பயண சிரமங்கள் போன்ற விளைவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. மக்கள் மட்டும் அல்லாமல், சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் இந்தத் தடை உத்தரவை மீறக் கோரி குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். “வாகனத்தின் வயதால் மட்டும் மாசுபாடு தீர்மானிக்க முடியாது” என்ற வாதம் பலரால் முன்வைக்கப்படுகிறது. “சேவை செய்யக்கூடிய நலமுள்ள வாகனங்களை ஓட்டுவதில் தவறில்லை” எனவும் பலர் வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில், மத்திய வர்த்தக மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், இந்த உத்தரவை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். நடுத்தர குடும்பங்களை நேரடியாக பாதிக்கும் இந்த தடை, அன்றாட வாழ்க்கையை சீரழிக்கும் எனும் எண்ணம் நிலவுகிறது.