டில்லி சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர். முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், தற்போதைய முதல்வர் அதிஷி உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
2015 மற்றும் 2020 தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி டில்லியில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 2015ல் 70 தொகுதிகளில் 67 இடங்களில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, 2020 தேர்தலிலும் 63 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் டில்லி, ஆம் ஆத்மியின் கோட்டையாக வலம் வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், கெஜ்ரிவால் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் இருந்தன. மதுபான ஊழல் வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்து அதிஷியை அந்த பதவியில் அமர்த்தினார்.

சிறையிலிருந்து விடுதலையான பிறகும், மக்கள் மீண்டும் வாய்ப்பு தருவார்கள் என கெஜ்ரிவால் நம்பிக்கை வெளியிட்டார். ஆனால் தேர்தல் முடிவுகள் முற்றிலும் எதிர்பாராத விதமாக அமைந்துள்ளன. ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்து ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். பாஜக வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்துடன் முன்னிலை வகிக்கின்றனர்.
தற்போது காலை 9 மணி நிலவரப்படி, 70 தொகுதிகளில் பாஜக 42 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் தற்போதைய முதல்வர் அதிஷி ஆகியோரும் தேர்தலில் வெற்றி பெறுவார்களா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. டில்லி தேர்தலின் இத்தகைய திருப்பம், பாஜக அரசியல் வீச்சை உயர்த்தியுள்ளது. இது ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருமா என்பதை வெற்றி முடிவுகள் உறுதிசெய்யும்.