புதுடெல்லி: டெல்லியின் ரோகினி பகுதியில் உள்ள பிரசாந்த் விஹாரில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை மர்ம பொருள் ஒன்று வெடித்து சிதறியது. இத்தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படாத போதிலும், பள்ளிச் சுவர், அருகில் இருந்த கடை மற்றும் வாகனம் ஆகியவை சேதமடைந்துள்ளன.
இதைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் டெல்லி போலீசார் அப்பகுதிக்கு சீல் வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் மாதிரிகளை சேகரித்த பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது இந்திய ஏஜென்டுகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக டெலிகிராம் அறிக்கை கூறியதை அடுத்து, காலிஸ்தான் தொடர்பு குறித்து விசாரணை நடத்தி வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
‘ஜஸ்டிஸ் லீக் இந்தியா’வின் டெலிகிராம் சேனல் குறித்த விவரங்களைக் கேட்டுள்ளதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. டெலிகிராம் சேனலில் இருந்து தங்களுக்கு இன்னும் பதில் வரவில்லை என்று கூறியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மாலை, ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற வாட்டர்மார்க் உடன் குண்டுவெடிப்பு பற்றிய செய்தி வந்தது.
அந்தச் செய்தியில், “குண்டர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் நமது உறுப்பினர்களின் குரலை அடக்கிவிடலாம் என்று நினைத்தால் இந்தியாவின் கோழைத்தனமான ஏஜென்சிகளும் அவர்களின் எஜமானர்களும் முட்டாள்களின் உலகில் வாழ்கிறார்கள்.
நாம் அவர்களுக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் மற்றும் எந்த நேரத்திலும் தாக்கும் திறன் கொண்டவர்கள் என்பதை அவர்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. #காலிஸ்தான் ஜிந்தாபாத், #ஜெ .எல்.ஐ. பிரிவினைவாத காலிஸ்தான் போராளிகளின் உலகளாவிய இந்தியா-விரோத நிலைப்பாட்டிற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை குறிப்பாக கனடாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டதன் பின்னணியில் இந்தியாவின் நிலைப்பாட்டை இது சுட்டிக்காட்டுகிறது.