காஞ்சிபுரம்: இந்தியாவில் செவிலியர்களுக்கான தேவை ஆண்டுதோறும் 18 சதவீதமும், உலகளவில் 100 சதவீதமும் அதிகரித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் புதிய கட்டிட திறப்பு விழாவில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் ஆசி வழங்கினார்.
நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியதாவது:-
அரசுகள் பொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. ‘கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் தேவைக்காக லாபம் ஈட்டுபவர்கள்; அரசு ஏன் தங்களுக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்றும் சொல்வார்கள்.
ஆனால், இங்குடாட்டா அவர்களின் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து செவிலியர் கல்லூரிக்கு கட்டிடம் கட்டியுள்ளது. அதற்காக அவர்களை பாராட்டுகிறேன். காஞ்சிபுரம் ஒரு வரலாற்று நகரம்.
இவ்வூரில் உள்ள சங்கர மடத்தைச் சேர்ந்த குரு பரம்பரையால் தொடங்கப்பட்ட செவிலியர் கல்லூரியில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான ஏழைக் குழந்தைகள் படிக்கின்றனர்.
நர்சிங் படிப்புக்கு நிறைய காலியிடங்கள் உள்ளன. இந்தியாவில் செவிலியர்களுக்கான தேவை ஒவ்வொரு ஆண்டும் 18 சதவீதம் அதிகரித்து வருகிறது. உலகளவில் இது 100 சதவீதம் அதிகரிக்கிறது.
இதன் மூலம் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் வெளிநாட்டில் வேலை செய்யப் போகிறீர்கள் என்றால், உங்களுக்கு மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள்.
அதேபோல் வெளி மாநிலங்களுக்கு சென்றாலும் அந்த மொழி தெரிந்திருக்க வேண்டும். தாய்மொழியை விட்டுவிடக்கூடாது. ஆனால் கூடுதல் மொழியைக் கற்பதில் தவறில்லை.
பிரதமர் மோடி வெளிநாடு செல்லும்போது இந்திய மாணவர்களை சந்தித்து பேசினார். அப்போது பலர் மருத்துவக் கல்விக்காக வந்ததாகக் கூறினர். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அவர்களின் பெற்றோர் ஏன் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க செலவிட வேண்டும்? ஏன் இங்கு படிக்க வாய்ப்பு தரக்கூடாது என்று கேட்கிறார்.
2014-ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 387 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு 51,348 மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். தற்போது மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை 731 ஆக உயர்த்தியுள்ளோம்.
இதன் மூலம் 1,12,112 மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ளனர். இது 100 சதவீதத்திற்கும் அதிகமாகும் என்றார். இந்த நிகழ்ச்சியில் டாடா சன்ஸ் குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.