”மாரடைப்பு, பக்கவாதம் நோய்களுக்கான சிகிச்சையை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்,” என ராஜ்யசபா ம.ஜ.த., உறுப்பினர் தேவகவுடா வேண்டுகோள் விடுத்தார்.
ராஜ்யசபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசுவதற்கு முன்னர், அவர் கூறியது பரபரப்பாக இருந்தது. இந்தியாவில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் நோய்கள் அதிகரித்துள்ள நிலையில், ஆண்டு தோறும் லட்சக்கணக்கானோர் உயிர் இழக்கின்றனர். அதிலும் 30 சதவீதம் பேர் 45 வயதிற்குட்பட்டவர்கள் என்ற வருத்தத்துடன் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

”மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய்களின் சிகிச்சைகள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். உயிர் காக்கும் மருந்துகளை இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இந்த திட்டம் ஒரு நல்ல திட்டம் ஆகும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் 70 சதவீதம் மக்கள், இந்த திட்டத்தின் கீழ் தரமான சிகிச்சை பெறுவதாக அவர் கூறினார். இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டம் 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கப்பட்டது.
மேலும், அவர் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாகவும், இது அவர்களின் குடும்பத்தை காப்பாற்ற கடுமையான சவாலாக இருப்பதாகவும் தெரிவித்தார்.