புதுடில்லி: ஆமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்துக்குப் பின்னர், ஏர் இந்தியாவின் போயிங் 787-8 மற்றும் 787-9 வகை விமானங்களில் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளும் வகையில், இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆமதாபாத்தில் இருந்து லண்டனை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட 30 வினாடிகளுக்குள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உட்பட 265 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்த டிஜிசிஏ, பாதுகாப்பு ஆய்வுகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, Gen X இன்ஜின் பொருத்தப்பட்ட விமானங்களில் பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தும் விரிவாக சோதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானம் புறப்படும் முன் எரிபொருள் அளவு கண்காணிப்பு, ஹைட்ராலிக் அமைப்புகள், மற்றும் பறக்கும் அமைப்புகள் உள்ளிட்டவை தினசரி ஆய்வு செய்யப்பட வேண்டும் என டிஜிசிஏ அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வரும் ஞாயிறு முதல் விமான கட்டுப்பாட்டு ஆய்வு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மின் உறுதி சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
போயிங் 787 வகை விமானங்களில் கடந்த 15 நாட்களில் ஏற்பட்ட கோளாறுகள் தொடர்பாக முழுமையான தகவல்களை திரட்டி, பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், அந்த விவரங்களை டிஜிசிஏக்கு அறிக்கையாக வழங்க வேண்டும் என்றும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாக டிஜிசிஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.