பஞ்சாபில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய ஊழல் வழக்கில், டிஐஜி அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி ஹர்சரண் புல்லார் ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சண்டிகரில் நடந்த இந்த சம்பவம் மாநில நிர்வாகத்திலும் போலீஸ் துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2007ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ஹர்சரண் புல்லார், ரோபர் சரக டிஐஜியாக பணிபுரிந்து வந்தார். முன்பு அவர் மொகாலி மற்றும் சங்குரு மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றியிருந்தார். சில வழக்குகளை தீர்க்கும் பெயரில் அவர் லஞ்சம் கேட்டதாக பல புகார்கள் முன்பே வந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், பதேகார்க் நகரில் பழைய பொருட்கள் விற்பனை செய்து வந்த ஒருவரிடம், வழக்கை முடிக்க ரூ.5 லட்சம் கேட்டு புல்லார் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அந்த நபர் சிபிஐக்கு புகார் அளித்தார். அதன் பேரில் சிபிஐ அதிகாரிகள் மறைமுகமாக கண்காணித்து வந்தனர்.
இன்று அவர் புகாராளரிடம் இருந்து ரூ.5 லட்சம் பெறும் போது சிபிஐ குழுவினர் கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனைகள் நடத்தப்பட்டு, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தற்போது அவர் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பஞ்சாப் அரசுப் பணியகங்களில் ஊழல் பிரச்சனையை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.