அகர் மால்வா: நாடு முழுவதும் லோக்சபா தேர்தலுடன் ஒரே நேரத்தில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த, ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இது தொடர்பான மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த 17-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக, இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற வாய்ப்பில்லை என மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் மத்திய பிரதேச மாநிலம் அகர் மால்வாவில் செய்தியாளர்களை சந்தித்த திக்விஜய் சிங்கிடம், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த திக்விஜய் சிங், “ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. லோக்சபாவில் நிறைவேற வாய்ப்பில்லை” என்றார். நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக தொண்டர்களை ராகுல் காந்தி தள்ளிவிட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு, “இது முற்றிலும் தவறானது. போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர்களிடையே கைகலப்பும், சலசலப்பும் ஏற்பட்டது. பாஜக எம்பி ஒருவர் மீது மற்றொருவர் விழுந்தார். இவ்வாறு அவர் கூறினார்.