புதுடில்லி: இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான உறவு மீண்டும் முன்னேறி வரும் நிலையில், டில்லியில் இருந்து சீனாவின் குவாங்சு நகருக்கு நேரடி விமான சேவை நவம்பர் 10ம் தேதி முதல் துவங்கப்பட இருப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சேவையால் இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகமும், சுற்றுலாவும் மீண்டும் உயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தொற்று மற்றும் கல்வான் மோதல் காரணமாக 2020 முதல் இந்தியா-சீனா விமான சேவை நிறுத்தப்பட்டது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தபோது இந்த சேவையை மீண்டும் துவங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கோல்கட்டா-குவாங்சு விமான சேவைக்கு பின், டில்லி-குவாங்சு வழியும் சேர்க்கப்பட்டுள்ளதுடன், இதற்காக ஏர்பஸ் A320 நியோ விமானம் பயன்படுத்தப்படும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இண்டிகோவின் உலகளாவிய விற்பனைத் தலைவர் வினய் மல்ஹோத்ரா கூறியதாவது: “இது இருநாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாகும். உலகின் மிகப் பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாடுகள் என்கிற அடிப்படையில், பொருளாதார மற்றும் சுற்றுலா துறைகள் இரண்டுக்கும் இது நல்ல விளைவு அளிக்கும்” என தெரிவித்தார்.
இந்த புதிய சேவையின் கீழ், டில்லி-குவாங்சு (6E 1701) விமானம் தினமும் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு குவாங்சுவை அடையும். திரும்பும் விமானம் (6E 1702) அதிகாலை 5.50 மணிக்கு குவாங்சுவில் இருந்து புறப்பட்டு காலை 10.10 மணிக்கு டில்லியை வந்தடையும். இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான புதிய நட்புறவு கட்டத்தில் இது முக்கிய மைல்கல்லாக இருக்கும் என நம்பப்படுகிறது.