
புதுடெல்லி: நவீன் கோப்பாராம் தனது X கணக்கில் பதிவிட்டுள்ளார். அதில், “எனது வீட்டின் அருகே ஒருவர் தோசை விற்கிறார். அதன் மூலம் தினமும் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கிறார். அப்படிப் பார்த்தால் மாதம் ரூ.6 லட்சம் வருமானம் வருகிறது. அனைத்து செலவுகளையும் கழித்தாலும் கூட மாதம் ரூ.3 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரை வருமானம் கிடைக்கும், அவர் அரசுக்கு வரி செலுத்துவதில்லை. மாதம் ரூ. 60 ஆயிரம் சம்பாதிக்கும் சம்பளதாரர் ஒருவர் 10 சதவீதம் வரி செலுத்துகிறார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும், பெருநிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் அல்லது சுயதொழில் செய்பவர்களின் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து சமூக ஊடகங்களில் காரசாரமான கருத்துக்கள் உள்ளன. மேலும், இந்தியாவில் வருமான வரி விதிப்பு முறையின் குறைபாடுகள் குறித்தும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளப் பயனர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், “தோசை விற்பவரைப் பற்றி பேசுவதற்கு முன், நகரத்தில் உள்ள மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், டீ வியாபாரிகள் மற்றும் வியாபாரிகள் பற்றிப் பேசுவோம்.

அவர்களில் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று, தங்கள் வீடுகளை அவ்வப்போது புதுப்பித்து வருகின்றனர். புதிய வாகனங்கள் வாங்குகிறார்கள். ஆனால் அவர்களும் வரி செலுத்துவதில்லை. இது எப்படி, ஏன்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார். மற்றொருவர், “அமைப்புசாரா தொழிலாளர்கள் அல்லது சுயதொழில் செய்பவர்களுக்கு கார்ப்பரேட் காப்பீடு இல்லை. கார், வீடு, பைக் வாங்க கடன் பெறுவது மிகவும் கடினம்.
பிஎஃப் கிடையாது. உத்தரவாதமான சம்பளம் இல்லை. அதே சமயம் அதிக ஜிஎஸ்டி செலுத்துபவர்களாகவும் இருக்கலாம். “ரூ.60,000 சம்பாதிக்கும் ஒருவர் செலுத்தும் வரியை விட அவர்கள் செலுத்தும் ஜிஎஸ்டி அதிகமாக இருக்கும்,” என்றார். மேலும், “ஆங்கிலம் பேசும் ட்விட்டர் பயனர்கள், தாங்கள் செலுத்தும் வரியால்தான் இந்த நாடு இயங்குகிறது என்ற எண்ணத்திலிருந்து விடுபட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.