மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்றுவரை நடைபெறாததால், சுமார் 14 கோடி இந்தியர்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை பெற முடியாமல் தவித்து வருவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவையில் உரையாற்றும் போது கூறினார். எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு விரைந்து நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2013 ஆம் ஆண்டு அமல்படுத்திய தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA), இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் உணவு பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. இந்த சட்டத்தின் மூலம், கிராமப்புற மக்களில் 75% மற்றும் நகர்ப்புற மக்களில் 50% பேர் பொது விநியோக முறையின் கீழ் மானிய விலையில் உணவுத் தானியங்களைப் பெறுகின்றனர். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 81.35 கோடி பேர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர்.
2021 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறாததால், இன்னும் 2011 கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே பயனாளிகள் கணக்கிடப்படுகிறார்கள். இதனால், கடந்த 14 ஆண்டுகளில் நாட்டின் மக்கள் தொகை அதிகரித்தபோதும், உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்படவில்லை. இதன் விளைவாக, 14 கோடி தகுதியுள்ள ஏழை மக்களுக்கு இச்சலுகைகள் கிடைக்காமல் இருக்கின்றன.
இந்தச் சூழலில், மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி, உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் தகுதியுள்ள அனைவரையும் சேர்ப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். கோவிட் பெருந்தொற்று காலத்தில் இந்தச் சட்டம் பல லட்சக்கணக்கான குடும்பங்களை பட்டினியிலிருந்து பாதுகாக்க உதவியது. ஆகவே, உணவுப் பாதுகாப்பு என்பது ஒரு சலுகை அல்ல, அது அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு, சுதந்திர இந்தியா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நான்கு ஆண்டுகளாக தாமதமாகியுள்ளது. 2021ல் திட்டமிடப்பட்ட இந்த கணக்கெடுப்பு இன்னும் எப்போது நடைபெறும் என்பதில் மத்திய அரசு தெளிவுபடுத்தவில்லை. 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டிலும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக போதுமான ஒதுக்கீடு செய்யப்படாததால், அது இந்த ஆண்டும் நடைபெற வாய்ப்பில்லையென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தாமதத்தின் காரணமாக, 14 கோடி ஏழை மக்கள் உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தங்களுக்குரிய உரிமைகளைப் பெற முடியாமல் உள்ளனர். எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைந்து நடத்தி, அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தினார்.