வைகுண்ட ஏகாதசிக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் திருமலை அன்னமைய்யா பவனில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 10-ம் தேதி முதல் 19ம் தேதி வரை திருமலையில் அனைத்து பக்தர்களும் சொர்க்கவாசல் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த 10 நாட்களில் மட்டும் 7 லட்சம் பக்தர்கள் சொர்க்கவாசல் தரிசனத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 10-ம் தேதி அதிகாலை கோவில் சடங்குகள் முடிந்து, அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் தரிசனம் துவங்கும். காலை 9 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி தங்க ரதத்தில் மலையப்பர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தொடர்ந்து மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை மலையப்பர் திருமலை வாகன மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
மறுநாள், வைகுண்ட துவாதசியை முன்னிட்டு, கோவில் அருகே உள்ள குளத்தில், அதிகாலை, 5.30 மணி முதல், 6.30 மணிக்குள், சக்கர ஸ்நானம் நிகழ்ச்சி நடக்கிறது. இதுவரை ரூ. 1.40 லட்சம் பக்தர்களுக்கு 300 சிறப்பு தரிசன டிக்கெட்டும், 19,500 பேருக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டும் ஆன்லைனில் விநியோகிக்கப்பட்டுள்ளது. வரும் 9-ம் தேதி திருப்பதியில் 8 இடங்களில் 91 கவுன்டர்கள் அமைக்கப்பட்டு சர்வ தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும்.
விஐபி பிரேக் தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்கள் மேற்கண்ட 10 நாட்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளுடன் இருக்கும் பெற்றோர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல், ஸ்ரீவாரி மெட்டு பகுதியில் மலையேற்றம் செல்லும் பக்தர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் திவ்ய தரிசன டிக்கெட்டும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. திருமலை சிஆர்ஓ அலுவலகத்தில் சாதாரண பக்தர்களுக்கு அறைகள் வழங்கப்படும்.
திருமலையில் 12,000 வாகனங்கள் நிறுத்த இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருப்பதி நகரின் பல இடங்களில் தர்ம தரிசன டோக்கன் வழங்கப்படும் இடங்கள் குறித்து கூகுள் தேடல் வரை படங்களுடன் கூடிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் அந்தந்த இடங்களுக்குச் சென்று ஆதார் அட்டையைக் காட்டி இலவச தரிசன டோக்கன்களைப் பெறலாம். பக்தர்களின் பாதுகாப்புக்காக 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு சியாமளா ராவ் தெரிவித்தார்.
வரும் 10-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஏழுமலையான் கோவில் முழுவதும் வைகானச ஆகம விதிப்படி வாசனை திரவியங்களால் சுத்தப்படுத்தப்பட்ட ஆழ்வார் திருமஞ்சன சேவை நேற்று காலை திருமலையில் வெகு சிறப்பாக நடந்தது. . கோவில் கர்ப்பகிரகம், சுவர்கள், பலிபீடம், கொடி கம்பம், உபசன்னிதி, கோவில் கோபுரம், பிரதான வாயில் ஆகியவை பன்னீர், பச்சை கற்பூரம், மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சுத்தம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு மேல் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.