பெங்களூருவில், மகாதேவபுரா தொகுதியில் கடந்த 2023 சட்டமன்ற தேர்தலில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாகவும், 12,000 போலி வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று தேர்தல் ஆணையம் மறுத்து, ராகுல் காந்திக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.

கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா, ஆதாரங்களை உறுதிமொழிப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்காத நிலையில், இது சட்டவிரோதமாக கருதப்படும் என்றும், தேர்தல் விதிகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி, “இது சத்தியப் பிரமாணம். எங்களின் தரவு அல்ல. அவர்களுடைய தரவு, நாங்கள் அதை காட்சிப்படுத்துகிறோம்” என பொதுமக்களுக்கு முன்பாக அறிவித்தார். தேர்தல் ஆணையத்தின் மறுப்பு, மோசடியை மூடுவதற்கான முயற்சி என்றும், உண்மை ஆதாரங்களை நாங்கள் விரைவில் வழங்குவோம் என்றும் காங்கிரஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில தேர்தல் அலுவலகமும் இதே கோரிக்கையுடன் கடிதம் அனுப்பியுள்ளது. வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற அல்லது நீக்கப்பட்ட வாக்காளர்கள் பற்றிய முழு விவரங்களும் உறுதிமொழியுடன் வழங்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் இந்திய ஜனநாயகத்தில் தேர்தல் அமைப்புகளின் நம்பகத்தன்மை குறித்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் தேர்தல் முறையைப் பற்றிய நம்பிக்கையை பாதிக்கும் வகையில் இது செயல்படக்கூடும் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.