காத்மாண்டு: சமீப காலமாக வன்முறையில் சிக்கியிருந்த நேபாளத்தில், அடுத்த ஆண்டு மார்ச் 5க்குள் தேர்தல் நடத்தப்படும் என்று இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
சமூக ஊடகத் தடைக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் குதித்ததால், அரசியல் நிலையம் சீர்குலைந்து, போலீஸ் துப்பாக்கிச் சூடு, வன்முறை சம்பவங்களில் 51 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பிரதமர் ஒலி சர்மா மற்றும் அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுசீலா கார்கி இடைக்கால பிரதமராக பதவியேற்றார்.

இந்நிலையில், காத்மாண்டுவில் அமலில் இருந்த ஊரடங்கு இன்று அதிகாலை 5 மணி முதல் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் முக்கிய இடங்களில் ராணுவம் கண்காணிப்பில் தொடர்ந்து உள்ளது. இதன் மூலம் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி, போக்குவரத்து, வணிகங்கள் வழக்கம்போல ஆரம்பித்துள்ளன.
நேபாளத்தில் 2026 மார்ச் 5க்குள் தேர்தல் நடைபெறும் என இடைக்கால அரசு உறுதி அளித்துள்ளது. புதிய அரசு அமைக்கும் வரை சுசீலா கார்கி இடைக்கால பிரதமராக பணியாற்றுவார். நேபாளத்தின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் இந்தியா முழு ஆதரவு தரும் என பிரதமர் மோடி முன்பே உறுதியளித்திருந்தார்.