பாலக்காடு மாவட்டம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குன்னத்தூர்மேடு கிருஷ்ணர் மற்றும் பாலமுரளி கோவிலில் அலங்கரிக்கப்பட்ட ஒன்பது யானைகளின் அணிவகுப்பில், கிருஷ்ணரின் தங்கச்சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. நகரில் மாலை நேரத்தில் ‘பாலகோகுலம்’ அமைப்பின் சார்பில், ராதா-கிருஷ்ணர் வேடம் அணிந்த சிறுவர், சிறுமியர் பங்கேற்ற ஊர்வலம், கோர்ட் ரோடு வழியாக கோட்டை வாசலை அடைந்தது.

குருவாயூர் புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவிலில் விழா அதிகாலை 3:00 மணிக்கு துவங்கியது. காலை 7:00 மணிக்கு பெருவனம் குட்டன் மாரார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வாத்தியக் கலைஞர்கள் பங்கேற்ற செண்டை மேள வாத்தியக் கச்சேரி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூன்று யானைகள் முன்னணி வகித்த ஊர்வலம் கோவில் வீதிகளில் நடைபெற்றது.
இந்நிலையில், பாலக்காடு குன்னத்தூர்மேடு ஊர்வலத்தில் பங்கேற்ற ‘செருப்புளச்சேரி மணிகண்டன்’ என்ற யானை திடீரென மிரண்டு ஓடியது. இதனால் அங்கிருந்த பக்தர்கள் பரபரப்புக்கு உள்ளானனர். உடனடியாக பாகன்கள் தலையிட்டு யானையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு சிறிது நேரம் பதட்ட நிலை உருவானது.
பின்னர் விழா நிகழ்ச்சிகள் வழக்கம்போல நடைபெற்றன. யானைகளின் அணிவகுப்பு, பக்தர்களின் உற்சாக பங்கேற்பு மற்றும் இசைக் கச்சேரி ஆகியவை விழாவுக்கு சிறப்பேற்றின. பாலக்காடு மற்றும் குருவாயூரில் நடந்த கொண்டாட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்த்தது.